திருப்பரங்குன்றம் சன்னதி தெரு, மேலரத வீதி, கீழரதவீதி, 16 கால் மண்டபம், பெரிய ரத வீதி, மலைக்கு பின்புறம் உள்பட ஊரின் அனைத்து பகுதிகளிலும் ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டு முருகப்பெருமான் பக்தி பாடல்கள், திருப்புகழ் முற்றோதுதல், பன்னிரு திருமுறை தமிழ் வேத பாராயணம், தவில், நாதஸ்வர இசை ஒளிபரப்பப்படுகிறது. யாகசாலை பூஜை துவங்கியவுடன் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒளிபரப்பப்படுகிறது. அனைத்து தெருக்களிலும் சீரியல் பல்புகளும், டியூப் லைட்களும் கட்டப்பட்டது இரவு நேரத்தில் பக்தர்களின் கண்களை கவர்வதாக உள்ளது. ராஜகோபுரம், கோயிலின் முன் பகுதி 16 கால் மண்டபம் மின்விளக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10 யாகசாலை பூஜை துவங்கியதில் இருந்து 20க்கும் மேற்பட்ட தவில், நாதஸ்வர கலைஞர்களின் கச்சேரி, கோயிலுக்குள் 20க்கும் மேற்பட்ட கலைஞர்களின் திருப்புகழ் முற்றோதுதல் நிகழ்ச்சி, 30க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றுள்ள தமிழ் வேத பாராயணம் நிகழ்ச்சி காலை முதல் இரவுவரை தொடர்ந்து நடக்கிறது. ஜூலை 10முதல் தற்காலிக மூலஸ்தானத்திற்கு தடை விதிக்கப்பட்டு கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆஸ்தான மண்டபம், திருவாட்சி மண்டபம், மடப்பள்ளி மண்டபம் வழியாக யாகசாலையை தரிசித்துச் செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலை பூஜையை காலை மாலை இது வேலைகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்துச் செல்கின்றனர்.