காஞ்சிபுரம்; கோவிந்தவாடியில் உள்ள குரு கோவிலில், 14ம் தேதி குடமுழுக்கு நடக்க உள்ள நிலையில், 24 அறநிலையத் துறை அதிகாரிகளை நியமித்து, இணை கமிஷனர் குமரதுரை உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், குரு கோவில் என அழைக்கப்படும் கைலாசநாதர் சமேத தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட பிற மாவட்டம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து, பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலில், ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், வரும் 14ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் நடைபெறும் குடமுழுக்கு விழாவுக்கு பல்வேறு முன்னேற்பாடுகளை கிராம மக்களும், ஊராட்சி நிர்வாகமும், அறநிலையத் துறையும், போலீசாரும் செய்துள்ளனர். இதில், அறநிலையத் துறை சார்பில், யாகசாலை பூஜை, முக்கிய பிரமுகர்களை வரவேற்பது, பிரசாதம் வழங்குவது, உணவு, குடிநீர் வழங்கல், பக்தர்கள் செல்லும் வரிசையை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளுக்கு, உதவி ஆணையர், செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், என 24 அதிகாரிகளை நியமித்து, இணை கமிஷனர் குமரதுரை உத்தரவிட்டுள்ளார். இன்றைக்கே சம்பந்தப்பட்ட அறநிலையத் துறை அதிகாரிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை கவனிக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளார்.