பதிவு செய்த நாள்
14
ஜூலை
2025
06:07
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்களின் அரோகரா கோஷம் விண்னை பிளந்தது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவள கனிவாய் பெருமாள் திருஉருவங்கள் மலையின் அடிவாரப் பாறையில் குடைந்து வடிவமைக்கப்பட்ட குடவரை கோயிலாகும். கோயிலில் 2025 பிப். 10ல் கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கியது. உப கோயில்களுக்கு இரண்டு கட்டங்களாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்து ஜூலை 10ல் யாக சாலை பூஜை துவங்கியது.
இன்று அதிகாலை 3:30 மணிக்கு மங்கள இசை முடிந்து விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசமாகி அதிகாலை 3:45 மணிக்கு 8ம் கால யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை முடிந்து காலை 5:00 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய தங்கம், வெள்ளி குடங்கள் யாகசாலையிலிருந்து கோபுரங்களுக்கு புறப்பாடாகியது. வேத மந்திரம் முழங்க, பக்தர்கள் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க, அதிகாலை 5:35 மணிக்கு ராஜகோபுரம், வல்லபக்கணபதி விமானம், கோவர்த்தனாம்பிகை அம்பாள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அதே நேரத்தில் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு மூலவர்களுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் மீது ட்ரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.
சிறப்பு ஏற்பாடுகள்: கும்பாபிஷேகம் முடிந்தவுடன் கோயிலுக்குள் தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் சிரமம் இன்றி சென்று திரும்ப இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை நகர் எங்கும் இருந்து காண 26 இடங்களில் மெகா எல்.இ.டி., டிவிக்கள் வைக்கப்பட்டுள்ளன. பத்து ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது, பக்தர்கள் பாதுகாப்புக்காக மூவாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அமைச்சர் மூர்த்தி சார்பில் திருமண மண்டபங்களில் 4 லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட உள்ளது. பக்தர்களுக்கு மஞ்சள் கிழங்கு, மஞ்சள் கயிறு, மூலவர் படம், விபூதி, இனிப்புகளுடன் பிரசாத பைகள் வழங்க அறங்காவலர் குழுத்தலைவர் சத்யபிரியா ஏற்பாடு செய்துள்ளார். பத்து இடங்களில் முதலுதவி மையங்கள், நடமாடும் கழிப்பறைகள், கிரிவல ரோடு உட்பட நகரின் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
நேரடி ஒளிபரப்பு ;கும்பாபிஷேக நிகழ்வு தினமலர் இணையதள டி.வி.,யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.