திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயிலில் சாஸ்திரப்படி சாலகட்ல ஆனிவார ஆஸ்தானம் நடைபெற்றது. திருமலை ஸ்ரீ ஸ்ரீ பெரியஜீயர் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ சின்னஜீயர் சுவாமி, தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு, தலைமை நிர்வாக அதிகாரி ஜே. சியாமளா ராவ் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆனி மாதத்தில் இறுதி நாளாவதால் ஆனிவார ஆஸ்தானம் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில் இந்த ஆஸ்தானம் நடைபெறும். முற்காலத்தில் தேவஸ்தான கணக்கு வழக்குகள் இந்த நாளில் தான் எழுதத் தொடங்குவர், புராண காலத்திலிருந்து இந்த நாள் தான் கணக்கு தொடங்கும் நாளாக இருந்து வந்தது. ஆனால் அது காலப்போக்கில் ஏப்ரல் மாதத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த உத்ஸவம் மட்டும் அதை நினைவுபடுத்தும் வகையில் இந்நாளிலேயே நடைபெறுகிறது. அதன்படி இன்று ஸ்ரீவாரி கோயில் சாஸ்திரப்படி ஆனிவார ஆஸ்தானம் நடைபெற்றது.
முன்னதாக, காலை தங்க வாயில் முன் ஸர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் திருமலையப்ப ஸ்வாமியை எழுந்தருளினார். மற்றொரு பீடம் மேல் விஷ்வக்ஸேனரை எழுந்தருளச் செய்து, சுவாமிகளுக்கு ஸ்ரீரங்கம் பட்டுப்புடவை, வஸ்த்திரம், அட்சதை சமர்பித்து நைவேத்தியம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கூடிய ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட மலர் பல்லக்கில் உலா வந்து நான்கு மாட வீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் ஸ்ரீவாரி கோயிலின் தலைமை அர்ச்சகர்கள் ஸ்ரீவாரியின் பாத அங்கியுடன் கூடிய "பரிவட்டம்" ஒன்றைத் தலையில் கட்டிக்கொண்டு, சுவாமியிடமிருந்து அரிசி தட்சிணையை ஏற்றுக்கொண்டு, நித்யஐஷ்வர்யோபவ என்று கூறி ஆசீர்வதித்தனர். பின் செயலாட்சி தலைவருக்கு தேவஸ்தான கொத்துசாவியுடன் கூடிய ஆரத்தியும், சடாரி சேவையும் நடைபெற்றது. விழாவில் தேவஸ்தாவ வாரிய உறுப்பினர்கள் பனபக லக்ஷ்மி, பானு பிரகாஷ் ரெட்டி, நரேஷ் குமார், சாந்தா ராம், சதாசிவ் ராவ், ஜங்கா கிருஷ்ணமூர்த்தி, ஜானகிதேவி, மகேந்திர ரெட்டி, கூடுதல் இஓ சிஎச் வெங்கையா சவுத்ரி, கோயில் துணை இஓ லோகநாதம் மற்றும் அலுவலர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.