சதுரகிரியில் ஆடி அமாவாசை வழிபாட்டிற்கு சிறப்பு ஏற்பாடு; 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
பதிவு செய்த நாள்
21
ஜூலை 2025 05:07
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு அனைத்து அரசு துறைகள் சார்பில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புப்படை உட்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இக்கோயிலில் நாளை பிரதோஷம், ஜூலை 23 சிவராத்திரி, ஜூலை 24ல் ஆடி அமாவாசை வழிபாடு நடக்கிறது. அதிகபட்சம் ஒரு லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மதுரை, விருதுநகர் மாவட்ட அரசு நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் தொட்டிகள், மின்விளக்கு வசதிகள், அன்னதானம் வழங்குதல், பி.எஸ்.என்.எல். டவர் உட்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்ட மருத்துவத்துறை சார்பில் மலையடிவார தோப்புகளில் உள்ள கிணறுகளில் நேற்று குளோரினேஷன் செய்யப்பட்டது. தாணிப்பாறை, அடிவாரத்தில் மந்தித்தோப்பு, மாவுத்து ஆகிய இடங்களிலும் 24 மணி நேர மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தாணிப்பாறை மெயின் கேட்டில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய மினி மருத்துவமனையும், மதுரை மாவட்ட மருத்துவ துறை சார்பில் அடிவாரம் முதல் கோயில் வரை பல இடங்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை, விருதுநகர் மாவட்ட காவல் துறை சார்பில் 2 எஸ் பி தலைமையில் பேரிடர் மீட்பு படை, நக்சல் தடுப்பு பிரிவு, போலீசார் தனிப்படை போலீசார் உட்பட 2000 க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து நகரங்களில் இருந்தும், மதுரை, திருமங்கலத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து வரும் பஸ்கள் அழகாபுரி, கோட்டையூர், தம்பி பட்டி, மகாராஜபுரம், தாணிப்பாறை பிரதான ரோட்டின் வழியாக தற்காலிக பஸ் ஸ்டாண்டுக்கு செல்ல வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் கிருஷ்ணன் கோயில், வத்திராயிருப்பு வழியாக தற்காலிக பஸ் ஸ்டாண்டுக்கு வர வேண்டும். இப்பஸ்கள் திரும்ப செல்லும்போது சிவசங்கு மடத்திலிருந்து மகாராஜபுரம் வழியாக வெளியேற வேண்டும். மீட்கப்பட்ட 8 ஏக்கர் ஆக்கிரப்பு சமப்படுத்தப்பட்டு அங்கு பக்தர்களின் வாகனங்களில் நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. முன்னேற்பாடு பணிகளை நேற்று விருதுநகர் கலெக்டர் சுகபுத்திராவும், மதுரை சரக டிஏஜி அபினேஷ் குமார் ஆய்வு செய்தனர். எளிதில் தீப்பற்றும் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் கொண்டு வருதல், வனவிலங்குகளுக்கு உணவு அளிப்பது, இரவு நேரங்களில் வனப்பகுதியில் தங்குவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டுமென வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
|