சுகப்பிரசவம் வேண்டி அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2025 05:07
திருப்புவனம்; திருப்புவனம் அருகே வில்லியரேந்தல் ஊர்க்காவலன் சாமி கோயிலில் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் வேண்டி அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி என்பதால் சிறப்பு பூஜைகள் உள்ளிட்டவைகள் நடைபெறுவது வழக்கம். வில்லியரேந்தல் ஊர்க்காவலன் சாமி கோயிலில் உள்ள காளி அம்மனுக்கு ஆடி மாதத்தில் வளைகாப்பு திருவிழா நடத்தப்படும். நேற்று மாலை வளைகாப்பு திருவிழாவை முன்னிட்டு ஊர்க்காவலன் சாமிக்கும், காளி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. மாலை ஆறு மணிக்கு அம்மனுக்கு பெண்கள் கண்ணாடி வளையல்கள் அணிவித்தனர். பின் கர்ப்பிணி பெண்கள், சிறுமிகள், பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வளையல் வழங்கப்பட்டது. கர்ப்பிணிகளுக்கு கோயில் பூசாரி வளையல் அணிவித்தார். பின் பக்தர்களுக்கு புளிசாதம், எலுமிச்சை சாதம், சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட சாதங்கள் வழங்கப்பட்டன. வளைகாப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.