சதுரகிரியில் ஆடி பிரதோஷ வழிபாடு; அதிகாலையில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2025 06:07
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலையடிவாரத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். காலை 6:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். பிளாஸ்டிக் பொருட்கள், கவர்கள், எளிதில் தீப்பற்றும் பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்கின்றனரா என வனத்துறையினர் சோதனை செய்த பின்னரே மலையேற அனுமதித்தனர். வெயிலின் தாக்கம் குறைந்து லேசான சாரல் மழை பெய்த நிலையில் குளுமையான பசுமைச் சூழலில் பக்தர்கள் மலையேறினர். மதியம் 12:00 மணி வரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறினர். கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தனமாகலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் காலை முதல் பக்தர்களுக்கு இடைவிடாமல் அன்னதானம் வழங்கப்பட்டது. அடிவாரத்தில் தனியார் அன்னதானம் மடங்குகளும் அன்னதானம் வழங்கினர். ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் கோயிலுக்கு வரும் அனைத்து வழித்தடங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மருத்துவம், சுகாதாரம் உட்பட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் முகாமிட்டு பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். அடிவாரம் முதல் கோயில் வரை அபாயகரமான இடங்கள், நீர்வரத்து ஓடைகளில் தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்பு துறையினர், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் அறநிலைத்துறையினர் செய்திருந்தனர்.