திருவண்ணாமாலை;திருவண்ணாமாலை, கோட்டுப்பாக்கத்தில், பரதேசி ஆறுமுகசாமி குருபூஜை விழாவில் குழந்தை வரம் வேண்டி குளக்கரையில் மண்சோறு சாப்பிட்டு பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பெரணமல்லூர் அருகே கோட்டுபாக்கம் கிராமத்தில், பழமை வாய்ந்த பரதேசி ஆறுமுக சுவாமி கோவில் உள்ளது. ஆடி அமாவாசையையொட்டி 189வது குரு பூஜை நடந்தது. இதற்காக இங்கு யாக குண்டம் அமைத்து யாகங்கள் நடந்தது. பின்னர் பரதேசி சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பிரசாதத்தை, விழாவில் பங்கேற்ற குழந்தை இல்லாத பெண்கள், முந்தானையால் வாங்கிக் கொண்டு அருகே உள்ள குளக்கரை படி மீது வைத்து, மண்டியிட்டு கைகளை பின்னால் கட்டிக் கொண்டு குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்டனர். கடந்த ஆண்டு குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்டு, குழந்தை பெற்றவர்கள், குடும்பத்துடன் வந்து, பிறந்த குழந்தைக்கு எடைக்கு எடை நாணயம் போட்டு, பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி செலுத்தி, பரதேசி சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், சேலம், புதுச்சேரி, வந்தவாசி, சேத்பட், ஆரணி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.