108 கிலோ மிளகாய் கரைசலில் குளித்து பக்தர்கள் நலனுக்கு பூசாரி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2025 06:07
இண்டூர்; இண்டூர் அருகே, ஆடி அமாவாசையான இன்று பக்தர்கள் நலம் பெற வேண்டி பெரியகருப்பசாமி கோவில் பூசாரி தன் மீது, 108 கிலோ மிளகாய் பொடி கரைசலை ஊற்றி, வழிபாடு நடத்தினார்.
தர்மபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த, நடப்பனஹள்ளியில் பெரிய கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு, ஆடி அமாவாசையையொட்டி இன்று மூலவருக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மூலவர் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். சுவாமிக்கு பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். கோவிலில் பூசாரி கோவிந்தன், கத்தி மீது ஏறி நின்று, பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். தொடர்ந்து, கோவிலுக்கு வந்த பக்தர்கள் நலம்பெற வேண்டி, 108 கிலோ மிளகாய் பொடி கரைசலை தன் மீது ஊற்றி, வழிபாடு நடத்தினார். தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள், கருப்பசாமியை தரிசித்து சென்றனர்.