கோவை ; ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோவை ரேஸ் கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் 1 லட்சத்து 50,000 வளையல் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஆடிப்பூரம் என்பது வருடம் தோறும் ஆடி மாதத்தில் வரக்கூடிய மிக முக்கியமான நாளாகும். இந்த நாளில் அம்பிகை வழிபாடு சிறந்ததாக கருதப்படுகிறது.இந்த நாளில் உமாதேவி தாயார் தோன்றியதாக ஐதீகம். உலக மக்களை காப்பதற்காக அம்பாள் சக்தி தேவியாக உருவெடுத்த நாள் என்று கூறப்படுகிறது.சித்தர்கள்,யோகிகள் இந்த நன்னாளில் தவத்தை தொடங்கியதாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோவை ரேஸ் கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் 1 லட்சத்து 50,000 வளையல்கள் கோவில் வளாகத்தை சுற்றியும், மூலவர் சாரதா தேவி சன்னதியிலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாரதா தேவியை வழிபட்டனர். பெண்கள் கண்ணாடி வளையல்களை சுவாமிக்கு காணிக்கையாக செலுத்தினர். நிகழ்ச்சியின் நிறைவாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.