பர்வதம் மண்டகப்படியில் சுவாமி; ராமேஸ்வரம் கோவில் இன்று முழுவதும் நடை அடைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2025 12:08
ராமேஸ்வரம்; பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியையொட்டி இன்று முழுவதும் ராமேஸ்வரம் கோவில் நடை அடைக்கப்பட்டது.
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 19-ந்தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 30-ந்தேதி அன்று சுவாமி-அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. ஆடி திருக்கல்யாண திருவிழாவின் 16-வது நாளான நேற்று இரவு 7 மணிக்கு கோவிலின் திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து சுவாமி அம்பாள் திருஊஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்று சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. இந்த நிலையில் திருவிழாவின் கடைசி நாளான நாளான இன்று காலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் தங்க கேடயத்தில் கெந்தமாதன பருவத மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைதொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு கோவில் நடையானது சாத்தப்பட்டு இன்று முழுவதும் பக்தர்கள் கோவிலில் உள்ள தீர்த்தக் கிணறுகளில் புனித நீராடவும், தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்பட வில்லை. முன்னதாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் கடைசி நேரத்தில் நடை சாத்தப்பட இருப்பது அறிந்து திருக்கோயில் வளாகத்தில் குடும்பத்துடன் ஓடிச்சென்று சாமியை தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் அனைவரும் வெளியேறிய பின் நடை முழுமையாக சாத்தப்பட்டது. பின்னர் சாமி தரிசனம் செய்ய வந்தவர்கள் திருக்கோயிலின் கிழக்கு ராஜ கோபுரம் முன் நின்றவாறு சாமி கும்பிட்டு விட்டு சென்றனர்.