காஞ்சிபுரம்; ஆடி திருவிழாவையொட்டி, காஞ்சிபுரம் திருக்காலிமேடு கிராம தேவதை திருவாத்தி அம்மன், சரஸ்வதி தேவி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் திருக்காலிமேடு கிராம தேவதை திருவாத்தி அம்மன் கோவிலில் 11வது ஆண்டு ஆடி திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் மாநகராட்சி, திருக்காலிமேடு கிராம தேவதையான திருவாத்தி அம்மன் கோவிலில் 11வது ஆண்டு ஆடிதிருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி காலை 6:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சரஸ்வதி தேவி அலங்காரமும், மஹாதீப ஆராதனையும்,தொடர்ந்து ஜலம் திரட்டும் நிகழ்வும், உத்சவர் அம்மன் வீதியுலாவும் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்வும், மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவை உத்சவமும், இரவு 8:30 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படையலிடப்பட்டது. இரவு 10:00 மணிக்கு ரேணுகாம்பாள் நாடக மன்றத்தினரின் சிறுவஞ்சிப்பட்டு சீதாராமன் கலை குழுவினரின் நாடகம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாட்டை திருக்காலிமேடினர் விழா குழுவினர் செய்திருந்தனர்.