படிப்பில் போட்டி போடலாம்! சொல்கிறார் காஞ்சிப்பெரியவர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2012 12:12
சரஸ்வதிபூஜையை ஒட்டி காஞ்சிப்பெரியவர் மாணவர்களுக்கு அருளிய அருளுரையைக் கேளுங்கள். ஒன்றே ஒன்றில் மட்டும்தான் போட்டியிருக்க வேண்டும். அந்தப் பையன் இவ்வளவு நிறைய மார்க் வாங்குகிறானே! நாமும் அப்படி படிக்க வேண்டும் என்ற ஆசையுடன், ஊக்கமாகப் படித்துப் போட்டி போட வேண்டும். இந்தப் போட்டியும் பொறாமையாகிப் போவதற்கு விடக்கூடாது. அறிவாளியாக, நல்லவனாக இருப்பதற்குப் போட்டி போடலாமே தவிர, பொறாமை கூடவே கூடாது. விளையாட்டிலும் அப்படியே! ஒரு பையன் படிப்பிலோ, விளையாட்டிலோ நம்மை விடக் கெட்டிக்காரனாக இருந்தால் அவனைப் பார்த்து பொறாமை உண்டாகி விடுகிறது. இந்த மாதிரியான அழுக்குகள் உண்டானால் நம் அறிவு, உடம்பு இரண்டையும் பாழாக்கிக் கொள்வோம். எல்லா மாணவர்களிடமும் சிநேகிதமாயிருப்பது தான் உள்ளத்தைத் தூய்மையாக வைத்து இருக்கும். பகவானுடைய பெரிய குடும்பத்தில் நாம் அத்தனைபேரும் சகோதரர்கள் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதைப் போல இன்பம் தருவது எதுவுமில்லை. உடம்பை பலமாக வைத்துக் கொள்வதற்காகவும், மனம் உற்சாகமாக இருப்பதற்காகவும் பிள்ளைகள் விளையாடுவது அவசியம்.