திருப்புத்தூர், ந.வைரவன்பட்டி கோயில்களில் சம்பக சஷ்டி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2025 05:11
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் பைரவருக்கு சம்பகசஷ்டி விழா துவங்கியது. ந.வைரவன்பட்டியில் நவ.25ல் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த திருத்தளிநாதர் கோயிலில் பைரவர் யோகத்தில் அமர்ந்த நிலையில் மேற்கு நோக்கி எழுந்தருளுகிறார். இவருக்கு அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். மேலும் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் சம்பகசஷ்டி விழா ஆறுநாட்கள் நடைபெறும். அசுரர்களின் மாயையில் இருந்து உலகைக் காப்பாற்ற, குமார ரூபத்தில் இருந்த பைரவர், அந்தகாசுரன் மற்றும் சம்பகாசுரனை வதம் செய்ததை அடுத்து இந்த விழா பைரவருக்கு நடத்தப்படுகிறது. இன்று காலை 10:30 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கியது. பாஸ்கர் குருக்கள்,ரமேஷ் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் அஷ்டபைரவர் யாகம் நடத்தப்பட்டது. பின்னர் பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவர் யோகபைரவருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் வெள்ளி கவசம் அணிந்து விபூதிக்காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.
பின்னர் நடந்த அலங்காரத் தீபாராதனையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மீ்ண்டும் மாலை 5:30 மணிக்கு அஷ்ட பைரவர் யாகம் துவங்கியது. பூர்ணாகுதி நடந்து மூலவர் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஆறு நாட்களிலும் காலை,மாலை இரு வேளைகளில் அஷ்டபைரவ யாகம்,அலங்கார தீபாராதனை நடைபெறும். ந.வைரவன்பட்டியில் நவ.25ல் சூரசம்ஹாரம் ந.வைரவன்பட்டியில் நகரத்தார் கோயிலான வளரொளிநாதர் வயிரவசுவாமி கோயிலில் நேற்று காப்புக்கட்டி சம்பகசஷ்டி விழா துவங்கியது. இன்று காலை 10:00 மணிக்கு ேஹாமம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு தீபாராதனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு மேல் பைரவர் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்தார். தினசரி காலையில் ேஹாமம், இரவில் சுவாமி புறப்பாடு நடைபெறும். நவ.25ல் சூரசம்ஹாரம் நடைபெறும்.