திருச்செந்தூரில் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் வீதியுலா வந்த சண்முகர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2025 03:08
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழாவில் 8ம் நாளான இன்று மதியம் சுவாமி சண்முகர், விஷ்ணு அம்சத்தில் பச்சை மர சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் வீதியுலா வந்து அருள் பாலித்தார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான 8ம் திருவிழா இன்று காலை சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் பிரம்மன் அம்சமாக வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வெள்ளை நிற உடை அணிந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.வழக்கத்தை விட சுவாமி சத்திரம் புறப்பாடு இரண்டு மணி நேரம் தாமதமாக நடைபெற்றது. தொடர்ந்து இன்று மதியம் சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் 23ம் தேதி சனிக்கிழமை நடக்கிறது.