திருப்பரங்குன்றம்; புதுப்பிக்கப்பட்ட குன்றத்து கோயில் லட்சுமி தீர்த்த குளம் திறப்பு விழா இன்று நடந்தது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான லட்சுமி தீர்த்த குளத்தின் உள்பகுதியில் 4 மூலைகளிலும் இருந்த கருங்கல் சுவர்கள் இடிந்து விழுந்தது. கோயில் சார்பில் அக்குளம் ரூ. 6.50 கோடியில் பழமை மாறாமல், ஏற்கனவே இருந்த கருங்கற்கள் கொண்டு சீரமைப்பு பணிகளும், வடக்கு பகுதிகளில் சிமென்ட் கான்கிரீட் சுவர் அமைத்து அதன் உள்பகுதியில் கருங்கல்கள் பதிக்க முடிவு செய்யப்பட்டு ஓராண்டுக்கு முன்பு பணிகள் துவங்கியது. குளத்தின் சீரமைப்பு பணிகளுடன் திருக்குளத்தின் உட்பகுதியை சுற்றிலும் நான்கு அடி உயரத்திற்கு சிமென்ட் தூண்களும் அதன்மேல் பகுதியில் சுதை வேலைகளும், இடைப்பட்ட பகுதிகளில் இரும்பு கேட்டுகளும் அமைக்கப்பட்டு வர்ணங்கள் தீட்டப்பட்டுள்ளது. குளத்தின் மேற்குப் பகுதியில் முன்பு இருந்த மரங்களின் வேர்களால் சுவர்கள் இடிந்து விழுந்தன. அப்பகுதியில் மீண்டும் மரங்கள் வளர்ந்து குளத்திற்கு மீண்டும் சேதம் ஏற்படாத வகையில் குளத்தைச் சுற்றிலும் மேல்பகுதியில் நான்கு மீட்டர் அகலத்திற்கு கருங்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. குளத்தின் மையப் பகுதியில் முன்பு கருங்கல்பீடமும் அதில் மின் விளக்கும் பொருத்தப்பட்டு இருந்தது. தற்போது லட்சுமி தீர்த்த குளத்தின் பெயருக்கு ஏற்றார் போல் மையப் பகுதியில் கருங்கல் பீடம் அமைக்கப்பட்டு அமர்ந்த நிலையில் லட்சுமியின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
கோடை காலங்களில் குளத்தில் தண்ணீர் நிரப்புவதற்காக ஆழ்குழாய் அமைக்கப்பட்டு கடந்த மாதம் பணிகள் நிறைவடைந்தது. புதுப்பிக்கப்பட்ட லட்சுமி தீர்த்த குளத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் வானொலி மூலம் திறந்து வைத்தார். திருக்குளத்தில் வெள்ளிக்குடத்தில் புனித நீர் நிரப்பி பூஜை, தீபாராதனை நடந்தது. பின்பு அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வம், பொம்மதேவன், ராமையா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சுமதி, பேஷ்கார் நெடுஞ்செழியன், பணியாளர்கள் கலந்து கொண்டனர். பின்பு திருக்குளத்திற்குள் வெள்ளி குடத்தில் இருந்த புனித நீர் திருக்குளத்தில் ஊற்றி பூஜை நடந்தது.