லால்பாக்கின் ராஜா சிலை கடலில் கரைப்பு; 35 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன1 லட்டு!
பதிவு செய்த நாள்
08
செப் 2025 12:09
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, பந்தல்களில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட, ‘லால்பாக்கின் ராஜா’ உள்ளிட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஏராளமானோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். விநாயகர் சதுர்த்தி, கடந்த 27ம் தேதி நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மஹாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில், பிரமாண் ட விநாயகர் சிலைகள் பந்தல்களில் 10 நாட்கள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன. இவற்றை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வை, ‘ஆனந்த சதுர்த்தி’ என அழைக்கின்றனர். மும்பையில் பந்தல்கள், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி, நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் மேளதாளம் முழங்க பக்தர்கள், ‘கணபதி பாப்பா மோரியா’ என பக்தி கோஷமிட்டபடி சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். மும்பையில் மிகவும் பிரபலமான லால்பாக்கின் ராஜா என்ற விநாயகர் சிலை உட்பட, பந்தல்களில் வைக்கப்பட்டிருந்த 5,855 சிலைகள், வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட 30,468 சிலைகள் நேற்று முன்தினம் காலை முதல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. விடிய விடிய ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட இந்த சிலைகள், நேற்று காலை கிர்கான் சவுபாட்டி கடற்கரையை அடைந்தன. லால்பாக்கின் ராஜா சிலையை படகில் ஏற்றி, நடுக்கடலுக்கு கொண்டு சென்று கரைத்தனர். இந்நிகழ்ச்சியில், பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகனும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநருமான அனந்த் அம்பானி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரூ.2.32 கோடிக்கு ஏலம்; தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள பந்தல்குடா பகுதியில் உள்ள கீர்த்தி ரிச்மான்ட் வில்லாவைச் சேர்ந்தவர்கள், விநாயகர் சதுர்த்தியையொட்டி பந்தலில் வைக்கப்பட்டிருந்த விநாயகருக்கு, 10 கிலோ லட்டு படைத்து வழிபட்டனர். 10 நாள் பூஜை நிறைவடைந்த நிலையில் நேற்று லட்டு ஏலமிடப்பட்டது. இது, 2.32 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இது போன்ற லட்டு, கடந்த ஆண்டு 1.87 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. ஏலத்தில் கிடைத்த தொகை ஆர்.வி.தியா அறக்கட்டளைக்கு வழங்கப்படும். இந்த அறக்கட்டளை முதியோர் பராமரிப்பு, மாதவிடாய் சுகாதாரம், பெண்கள் நலன், கல்வி, ஊட்டச்சத்து, மருத்துவ உதவி, விலங்குகள் நலன் போன்ற நலத்திட்டப் பணியில் ஈடுபடுகிறது. 6 ஆண்டுக்கு பின் ஏலத்தில் கிடைத்த லட்டு; தெலுங்கானா தலைநகரான ஹைதராபாதின் புறநகர் பகுதியில் உள்ளது பாலப்பூர். இங்குள்ள பாலப்பூர் கணேஷ் ஷோபா யாத்திரை குழுவினர் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகருக்கு மெகா லட்டுவை வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் அதை ஏலமிட்டு கிடைக்கும் தொகையை, பல்வேறு நலத்திட்டப் பணிக்கு செலவழிக்கின்றனர். இங்கு, லட்டு ஏலம் 1994 முதல் நடக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் லட்டு ஏலம் விடப்பட்டது. அப்போது, கர்மன்காட் பகுதியைச் சேர்ந்த லிங்கலா தஷ்ரத் கவுடு என்பவர், 35 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இவர், இதுவரை ஆறு முறை ஏலத்தில் பங்கேற்ற நிலையில், ஏழாவது முறை தான் விநாயகர் லட்டுவை வாங்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாக பெருமையுடன் தெரிவித்தார். பாலப்பூர் லட்டு, கடந்த ஆண்டு 30.1 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
|