மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் தேருக்கு, ஆறு மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் ஷெட் அமைக்கவில்லை. கோவை மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இந்த கோவில் தேருக்கு ஷெட் அமைக்க, கடந்த பங்குனி மாதம் பணிகள் தொடங்கின. தேர்த் திருவிழா முடிந்து, ஆறு மாதங்கள் ஆகியும், இன்னும் தேருக்கு ‘கவசம்’ அமைக்கவில்லை.
தேருக்கு ஷெட் அமைக்கும் பணிகள் நடைபெற்ற போது, தேரை சற்று தள்ளி நிறுத்தி இருந்தனர். அந்த இடத்தில் புரட்டாசி சனிக்கிழமை விழா நாளில், நூற்றுக்கணக்கான தாசர்கள் அமர்வது வழக்கம். அதனால் அவசரக்கதியில் ஷெட் அமைப்பது முழுமை அடையாத நிலையில், தேரை இரும்பு ஆங்கில்களுக்கு மத்தியில் நிறுத்தியுள்ளனர்.
இது குறித்து காரமடையில் உள்ள சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: காரமடை அரங்கநாதர் கோவில் தேருக்கு, பாதுகாப்பு கவசம் அமைக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த பணிகளை, ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் முடிக்காமல், காலம் கடத்தி வருகின்றனர். தேர் பாதுகாப்பு கவச பணிகளை துரிதமாக செய்ய, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. நடைபெறும் பணிகளை பார்த்தால், அடுத்த மாசி மகத் தேர்த்திருவிழாவுக்குள், தேருக்கு பாதுகாப்பு கவசம் செய்து முடிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே மாவட்ட ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், துரித நடவடிக்கை எடுத்து தேருக்கு பாதுகாப்பு கவசம் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.