கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் சுவாமி கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதாசி விழாவையொட்டி காலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 10 மணிக்கு சுவாமி சயன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை 3 மணிக்கு விஸ்வரூப சேவை நடந்தது. மாலை 6.30 மணிக்கு மூல ஸ்தானத்திலிருந்து சுவாமி புறப்பட்டு, பரமபதவாசல் சென்றடைந்தார். அங்கு சதுர்வேத பாராயணங்கள் நடைபெற்று பரமபதவாசல் திறக்கப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா... நாராயணா... என பக்தி முழக்கமிட்டனர். பின், ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் சாமிநாதன், பேஷ்கார் கண்ணன் செய்திருந்தனர்.