உடுமலை: உடுமலை அருகே கொங்கு சோழர்கள் கால கல்வெட்டு, வரலாற்று ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே குமரலிங்கத்தில், பழமை வாய்ந்த கரியபிரான் கோவில் உள்ளது. இக்கோவிலில், சிதைந்த நிலையில் இருந்த கல்வெட்டை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.
இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: குமரலிங்கம் கரியபிரான் கோவில், அமராவதி ஆற்றங்கரையில், 800 ஆண்டுகளுக்கு முன், கொங்குச்சோழர்களால் கட்டப்பட்டது. கல்வெட்டில் யாருடைய பெயரும் கிடைக்கவில்லை. எழுத்து அமைப்பு அடிப்படையில், 12 -–- 13ம் நுாற்றாண்டை சேர்ந்தது என கணிக்கலாம்.கல்வெட்டில், தனியாரால் கைவிடப்பட்ட விளைநிலம், கொங்கு சோழ மன்னரின் ஆட்சியில், அரசால் மீட்கப்படுகிறது. இதை, ‘இந்நிலம் நம்முதானமையில்’ என, கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதன் அர்த்தம் ‘அரசர் முன்னிலையில்’ என்பதாகும். அந்நிலம் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டு, அந்நிலத்தில் வரும் விளைச்சலை, கோவில் கருவூலத்துக்கு அளிக்க வேண்டும். மீட்கப்பட்ட நிலத்தின் துல்லியமான நான்கு எல்லை குறிப்பு; கொடை அளிப்பு; விளைச்சலை கருவூலத்தில் சேர்ப்பது; உத்சவ நிகழ்வில் அமுது படைக்க, கருவூலத்தில் இருந்து எடுக்க வேண்டிய நெல்லின் அளவு ஆகியவை துல்லியமாக குறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.