பதிவு செய்த நாள்
25
டிச
2012
11:12
திருவள்ளூர்: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோ விலில் ஆருத்ரா தரிசனம் வரும், 28ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற உள்ளது.திருவள்ளூர் அடுத்த, திருவாலங்காடுவில் உள்ளது வண்டார்குழலி அம்மை சமேத வடாரண்யேஸ்வரர் கோவில். சிவபெருமான் நடனம் ஆடிய திருச்சபைகளில் முதல் சபையான ரத்தின சபை என, இத்தலம் அழைக்கப்படுகிறது. காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து வந்து, சிவபெருமானின் நடனத்தை கண்டு ரசித்தஸ்தலம்.இரவு முழுவதும் அபிஷேகம் இங்கு ஆண்டுதோறும், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகம் "ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார் என்பதால், அந்த நட்சத்திரத்தில் இங்கு அபிஷேகம் நடைபெறுகிறது.இந்தாண்டு ஆருத்ரா தரிசனம், வரும், டிச., 28ம் தேதி, வெள்ளிக்கிழமை நடக்கிறது. அன்றைய தினம், இரவு, 9:00 மணியளவில், ரத்தின சபாபதிப் பெருமான், ஸ்தல விருட்சத்தின் கீழ், புதிதாக நிர்மாணித்துள்ள ஆருத்ரா அபிஷேக மண்டபத்திற்கு எழுந்தருள்வார். இரவு, 9:30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பித்து, விடியற்காலை 4:00 மணி வரை நடைபெறும். ஏற்பாடுஅதன் பின்னர், அலங்காரம் செய்து, மறுநாள், 29ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு தீபாராதனை நடைபெற்று, ஆலமர பிரகாரம் வலம் வந்து கோபுர தரிசனம் நடைபெறும். பகல் 1:00 மணிக்கு அனுக்கிரக தரிசனமும், மறுநாள், 30ம் தேதி காலை, 8:45 மணிக்கு சாந்தி அபிஷேகமும் நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர் என்பதால், அதற்கான ஏற்பாடுகளை, திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் புகழேந்தி மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.