கரிய மலையில் ஐயப்பன் கோவில் ரூ.50 லட்சத்தில் பணிகள் ஜரூர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2012 11:12
மஞ்சூர்: மஞ்சூர் அருகே கரியமலையில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் ஐயப்பன் கோவில் திருப்பணிகள் விரைவாக நடந்து வருகிறது.மஞ்சூரில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் ஐயப்பன் விளக்கு பூஜை, அனைத்து தரப்பு மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மஞ்சூர் பஜாரில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் விளக்கு பூஜை நடந்து வருகிறது. ஸ்ரீ ஐயப்பன் பக்த கோடி குழுவினர், ஐயப்பன் கோவில் கட்ட திட்டமிட்டனர். இதற்காக அனைத்து தரப்பினரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. கோவில் கட்ட முடிவெடுக்கப்பட்டதை அடுத்து, கரியமலை சாலையில் 17.25 சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டது. கடந்தாண்டு கோவில் திருப்பணிகள் துவக்கப்பட்டு, பணிகள் விரைவாக நடந்தது. சபரிமலை ஐயப்பன் கோவில் தோற்றத்தை போல் கோவில் கட்டப்பட்டு வருகிறது. 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கோவில் திருப்பணிக்கு அனைத்து தரப்பினரும் நிதி, பொருளுதவி செய்துள்ளனர். தற்போது கோவில் திருப்பணிகள் முடிவடையும் தருவாயில், வரும் மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்துள்ளனர். மஞ்சூரில் நடப்பாண்டுக்கான 49ம் ஆண்டு ஐயப்பன் விளக்கு பூஜை 26ம் தேதி நடக்கிறது.