தென்காசி:அச்சன்கோவில் அரசன் ஐயப்பன் கோயிலில் மண்டல மகோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் அச்சன்கோவிலில் அரசன் ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மண்டல மகோற்சவ விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, மாலையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சென்னை ராமச்சந்திரன் தினமும் அன்னதானம் வழங்கினார்.விழாவின் முக்கிய நாளான நேற்று காலையில் ஐயப்பனுக்கு மகாபிஷேகம் நடந்தது. உற்சவர் கோயில் உள் பிரகாரம் உலா வந்தார். மதியம் 1 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேருக்கு ஐயப்பன் எழுந்தருளினார். "சுவாமியே சரணம் ஐயப்பா என பக்தி கோஷங்கள் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். காந்தமலையில் பாவூர்சத்திரம் ஐயப்ப பக்தரால் கண்டெடுக்கப்பட்ட ஐயப்பனின் தங்க வாளை கோயில் நிர்வாக அதிகாரி ராதாகிருஷ்ணன் தேருக்கு முன் கையில் ஏந்தி சென்றார். மேல ரதவீதியில் கருப்பன் துள்ளல் நடந்தது. 2 மணிக்கு தேர் நிலை வந்து சேர்ந்தது. சிறப்பு தீபாராதனைக்கு பின் ஐயப்பன் கோயிலுக்குள் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சிறப்பு தீபாராதனை வழிபாடு நடந்தது. இன்று (25ம் தேதி) ஆராட்டு விழாவும், நாளை (26ம் தேதி) மண்டல மகோற்சவ நிறைவு விழாவும் நடக்கிறது.