பெருங்கற்கால கற்திட்டை கண்டுபிடிப்பு மக்கள் வாழ்வியலை உறுதி செய்யும் சான்று
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2025 12:09
உடுமலை; உடுமலை அருகே, பெருங்கற்காலத்தில் மக்கள் வாழ்விடத்தை குறிக்கும் வகையில், பள்ளபாளையத்தில் கற்திட்டை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர், உடுமலை அருகே பள்ளபாளையம், செட்டிகுளம் பகுதியில், பெருங்கற்காலத்தை சேர்ந்த கற்திட்டையை ஆய்வு செய்து, ஆவணப்படுத்தியுள்ளனர். இது குறித்து, ஓய்வு பெற்ற மத்திய தொல்லியல் துறை ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி கூறியதாவது: உடுமலை அருகே, பள்ளபாளையத்தில் செங்குளம் கரையில், 3 ஆயிரம் ஆண்டு காலத்திற்கும் முற்பட்ட கற்திட்டை கண்டறியப்பட்டுள்ளது.
இது, ஐந்து பாறைக்கற்களால் முறையே, 6 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்டதாகவும், இரண்டு பக்கமும் ஊன்றப்பட்டு, ஒரு பகுதியில் ஐந்தடி அகலமும் ஆறடி உயரமும் கொண்ட ஒரே பாறைக்கல்லால் பின்புறம் நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு மேல் ஒரு அடி அகலத்தில், ஆறடி நீளத்தில், ஆறடி அகலத்தில் ஒரே பெரிய பாறைக்கல்லால் மூடப்பட்டுள்ளது. இந்த கற்திட்டைக்கு அருகில் ஒரு பழங்கால சிவன் கோவிலும் பராமரிப்பு இல்லாமல் மூடப்பட்டு உள்ளது. இந்த கற்திட்டைகள் வரலாற்று காலத்திற்கு முன்பே, மக்கள் வாழ்விடமாக இருந்ததற்கு சான்றாக உள்ளது. மடத்துார், நீலம்பூர், கொழுமம், ரெட்டையம்பாடி, பெரியபாப்பனுாத்து உள்ளிட்ட பகுதிகளில், இதே போன்று இருந்தாலும், ஒழுங்கமைக்கப்படாத பெரும் கற்பாறைகளால் ஒரு அறை போன்று உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழக அரசு அகழாய்வு நடத்திய கொங்கல் நகரம் பகுதியிலும், மிக நேர்த்தியாக செதுக்கப்பட்ட கற்பனைகளைக் கொண்டு, சிறிய அறை போன்று அமைக்கப்பட்ட கற்திட்டைகளாக காணப்படுகிறது.
இது போன்ற கற்திட்டைகள் பெரும்பாலும் மிகப்பெரிய நிலப்பரப்பில், அதிக எண்ணிக்கையில் காணப்படும். மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததாலும், புதையல் வேட்டைகளாலும் பெரும்பான்மையானவை அழிக்கப்பட்டும், அழிந்தும் போயுள்ளன. கொங்கல் நகரம், கோட்டமங்கலம் பகுதிகளில் உள்ள கற்திட்டைகள், செயற்கையாக துளைகள் உருவாக்கப்பட்டு, அந்தப் பாறைக்கற்கள் ஒழுங்கமைக்கப்பட்டதாக உள்ளது. இவ்வாறான கற்திட்டைகள், பெருங்கற்காலத்தில் மக்கள் வாழ்ந்ததையும் உறுதி செய்கின்றன. எனவே, இவற்றை பாதுகாக்கவும், முறையாக தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளவும் வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார். ஆய்வின் போது, வரலாற்று ஆய்வு நடுவத்தைச்சேர்ந்த சிவக்குமார், அருட்செல்வன் உடன் இருந்தனர்.