திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் 25 முகங்களுடன் மஹாசதாசிவமூர்த்தி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2025 11:09
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் நவராத்திரி விழா கொலுவில் அருள்பாலிக்கும், 25 முகங்களுடன் மஹாசதாசிவமூர்த்தியை, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
பிரேமா கல்வி நிலையங்கள், திருப்பூர் வடக்கு ரோட்டரி நவராத்திரி குழு, ஆதீஸ்வர் டிரஸ்ட் சார்பில், 33ம் ஆண்டு நவராத்திரி விழா நடந்து வருகிறது. தினமும் காலை, விசாலாட்சி அம்மனுக்கு மகா அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜை நடக்கிறது. மாலையில், விசாலாட்சியம்மன் உற்சவருக்கு, சிறப்பு அலங்காரபூஜையும், கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. நவராத்திரிவிழாவையொட்டி, முளைப்பாலிகையுடன், பெரிய கொலு அமைக்கப்பட்டுள்ளது. கொலுவின் அருகே, மீனாட்சி திருக்கல்யாணம், திருப்பதி வெங்கடாசலபதி – பத்மாவதி தாயாரும் அருள்பாலிக்கின்றனர். அப்பகுதியில், நடுநாயகமாக மஹா சதாசிவ மூர்த்தி அருள்பாலிக்கிறார். அவர், 25 முகங்களுடன், அனைத்து உயிர்களுக்கும் அனுக்கிரகம் செய்யும் விதமாக காட்சியளிக்கிறார். தினமும் பக்தர்கள் பயபக்தியுடன் வழிபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கோவில் சிவாச்சாரியார்கள் கூறுகையில், ‘மஹா சதாசிவமூர்த்தி என்றால், அளவற்ற அன்பும், அருளும் நிறைந்தவர் என்று அர்த்தம். சிவபெருமானின், 64 வடிவங்களில் ஒன்றாக இருக்கும் மஹா சதாசிவமூர்த்தி உருவம், 25 முகங்களுடன் விஸ்வரூபமாக காட்சியளிக்கிறது. கோவில் கோபுரங்களில் மட்டும் காணப்படும் மஹாசதாசிவ மூர்த்தி சிற்பம், மிகவும் சக்திவாய்ந்தது. திருப்பூர் மக்களின் எத்தகைய துயராக இருந்தாலும், அவற்றை தீர்த்துவைத்து, நன்மைகளை வாரி வழங்கும் ஆற்றல் மஹா சதாசிவ மூர்த்தியிடம் இருக்கிறது. நவராத்திரி விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள, மஹா சதாசிவமூர்த்தியை, திருப்பூர் மக்கள் கட்டாயம் ஒருமுறையாவது தரிசனம் செய்து பேறுபெற வேண்டும்,’ என்றனர்.