கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சின்னஆனையூரில் மின்னல் தாக்கியதில், அங்காள பரமேஸ்வரி கோவில் கோபுரம் சேதமடைந்து அதில் இருந்த கற்கள் கீழே விழுந்தன. இதில் பக்தர்கள் இருவர் காயமடைந்தனர். கமுதி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மேகமூட்டமாக மின்னலுடன் மழைபெய்தது. நேற்று மாலை கமுதி அருகே சின்னஆனையூர், மருதங்கநல்லுார், பசும்பொன் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் சின்னஆனையூரில் அங்காள பரமேஸ்வரி கோவில் கற்கோபுரத்தின் சிறு பகுதி சேதமடைந்து கீழே விழுந்தது. அச்சத்தம் கேட்டு கோவிலில் தரிசனம் செய்து வெளியே வந்த சிருமணியேந்தலைச் சேர்ந்த இருவர் இதில் லேசாக காயமடைந்தனர். அதுபோல, துாத்துக்குடி கடற்கரையில் குளிக்க சென்றபோது மின்னல் தாக்கியதில் காயமடைந்த நான்கு வாலிபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முள்ளக்காடு ராஜிவ்நகரை சேர்ந்த தங்கமுத்து, 18, அன்பரசன், 18, ஆனந்தகிருஷ்ணன், 17, பிரின்ஸ், 17, ஆகியோர் காயமடைந்தவர்கள். இவர்களுக்கு, 35 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.