பள்ளிக்கல்வி துறை சார்பில், கலை திருவிழாவுக்காக வெளியிடப்பட்ட, வேர்களைத் தேடி என்ற விளம்பரத்தில், தஞ்சாவூர் பெரிய கோவில் கோபுரத்தின் நிழல் கீழே விழாது என்ற, தவறான தகவல் இடம் பெற்றிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
தஞ்சாவூரில் மன்னர் ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவில் உலகப் புகழ் பெற்றது. பெரிய கோவிலின் விமானம், 80 டன் எடையுள்ள, ஒரே கல்லால் ஆனது. அதன் நிழல் கோவிலுக்குள்ளேயே விழும்; அதுவே அதிசயம். தற்போது, பள்ளிக்கல்வி துறை சார்பில், கலைத்திருவிழா நடத்துவதற்காக, விளம்பரம் தயாரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில், ஒரு தாத்தாவும், பேத்தியும் பேசுவது போல உள்ள உரையாடலில், நிழலே விழாத தஞ்சை பெரிய கோவில் என்ற வாசகம் வருகிறது. இது, பள்ளி மாணவர்களிடம் தவறான தகவலை பரப்புவதாக உள்ளது. உண்மையில், காலையில் மேற்கிலும், மாலையில் கிழக்கிலும் நிழல் விழுவதை, வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன், தன், ராஜராஜேச்சரம் நுாலில் புகைப்படமாக ஆவணப்படுத்தி உள்ளார். இதையே, பலர் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். எனவே, பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ள, தவறான விளம்பரத்தை, சமூக வளைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆ ய்வாளர்கள் கூறுகையில், மூன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நிழல் விழாது என்றும், பிளஸ் 1 பாடப்புத்தகத்தில் நிழல் விழும் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முரணான தகவல்களையும் பள்ளிக்கல்வி துறை சரி செய்ய வேண்டும், என்றனர். - நமது நிருபர் -