சிவனுக்குரிய விரதங்களில் மிக முக்கியமான ஒன்று பிரதோஷம் விரதம். சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது மகா பிரதோஷம் தினமாகும். பிரதோஷ வேளையில் சிவனை வழிபட சகல துன்பங்களும் தீரும். நந்தியம் பெருமானுக்கும் அபிஷேகம் செய்து, வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் மீண்டும் எழுந்து ஆனந்தத் தாண்டவம் ஆடியது ஒரு பிரதோஷ தினம். இன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை இறைவழிபாடு செய்வது அதிலும் குறிப்பாக சிவாலயம் சென்று வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். காரணம் இந்த நாளில் பிரதோஷ வேளையில் அனைத்து தெய்வங்களும் சிவன் சந்நிதியில் அவரை வழிபட எழுந்தருளியிருப்பார்கள் என்றும் அந்த நாளில் சிவன் சந்நிதியில் வைக்கும் கோரிக்கைகளை அந்த தெய்வங்கள் உடனே ஆசீர்வதிக்கும் என்பதும் நம்பிக்கை. இன்று சிவபெருமானை தரிசித்து சகல நன்மைகளும் பெறுவோம்..!
ஐப்பசி மாதப்பிறப்பு தமிழ் மாதங்களை ஆறு, ஆறாக பிரித்து, சித்திரை மற்றும் ஐப்பசிக்கு, விஷு என்ற அடைமொழி கொடுத்து, இவ்விரு மாதங்களை புண்ணிய நீராடலுக்குரிய காலங்களாக கருதுகின்றனர், நம் முன்னோர். சித்திரையில் வெப்பம்; ஐப்பசியில் குளிர். இந்த இரண்டு காலங்களும் சம அளவில் நன்மை தருவதாக அமைய வேண்டும் என்பதற்காகவே, விஷு எனும் விழாவை கொண்டாடுகின்றனர். ஐப்பசியை, துலாம் (தராசு) மாதம் என்பர். இந்த மாதத்தில், துலாம் ராசியில் நுழைகிறார், சூரிய பகவான். ஐப்பசி மாதம் அடை மழைக் காலம்; அப்போது, நதிகள் பெருக்கெடுத்து ஓடும். சித்திரையில் அவ்வாறு இருக்காது. அதனால், இரண்டு காலத்திலும், நதிகளில், போதுமான தண்ணீர் வேண்டும் என பிரார்த்திக்கும் இயற்கை வழிபாடாகவே, சித்திரை விஷுவும், ஐப்பசி விஷுவும் அமைந்துள்ளன. விஷு என்ற சொல்லுக்கு, புதியது, காட்சி என்றெல்லாம் பொருள் உண்டு. தவமுனிவரான அகத்தியர், தமிழகத்துக்கு தந்த, இரு பெரும் கொடைகள் காவிரியும், தாமிரபரணியும்! அவை, என்றும் புதிதாக, அவர் உருவாக்கிய காலத்தை போல், பெருகி ஓட வேண்டும் என்பதாலேயே, விஷு விழா கொண்டாடப்படுகிறது.