திருப்பதி திருமலையில் வேங்கடேசப் பெருமாள் கோயிலிருந்து பாபநாசத் தீர்த்தத்துக்குச் செல்லும் வழியில், சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஜாபாலி ஆஞ்சனேயர் கோயில் அமைந்துள்ளது. திருமலைக்குச் செல்பவர்களில் பெரும்பாலோருக்கு இந்த கோயில் இருப்பது தெரியாது. திருமலை தேவஸ்தான பேருந்துகள் செல்கின்றன.
ஜாபாலி முனிவர் தவமிருந்ததாகச் சொல்லப்படும் இப்பகுதி அவர் பெயராலேயே வழங்கப்படுகிறது. பஸ் நிறுத்தத்திலிருந்து சுமார் 250 படிகள் ஏறிச்சென்றால், எழிலார்ந்த இயற்கைச் சூழலில் தவக்கோல நிலையில் ஆஞ்சனேயர் ஜாபாலி ஆஞ்சனேயராக அருள்பாலிக்கிறார். மிகுந்த வரப்பிரசாதியான இவர் சன்னதிக்கு நேரெதிரே ஜாபாலி தீர்த்தம் என்னும் குளம் உள்ளது. இந்தக் குளத்தில் நீராடிவிட்டு வந்து இவரை வணங்கினால், பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட எல்லா தீவினைகளும் அகன்று விடும். ஏழரைச்சனி நடப்பவர்களின் துன்பமும் நீங்கும். மகப்பேறில்லாதவர்கள் மழலைச் செல்வத்தை அடைகின்றனர் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.