கம்பம் கம்ப ராயப் பெருமாள் மற்றும் காசி விஸ்வநாதர் கோயிலில் ஒரே வளாகத்தில் சிவனும், பெருமாளும் தனித் தனி சன்னதிகளில் எழுந்தருளியிருப்பது சிறப்பாகும். வலது கை சின்முத்திரையுடனும், இடது கையில் கமண்டலத்துடன் தட்சிணாமூர்த்தியும், ஆறு முகங்கள், 12 கைகளுடன் முருகனும், தெற்கு திசை நோக்கி பைரவரும் உள்ளனர். கோயில்களில் மேற்கு, தெற்கு திசை நோக்கி இருக்கும் பைரவர்கள் அதிக சக்தி கொண்டவர்கள் என புராணங்கள் கூறுகிறது. இவர்களுக்கு பூஜைகள் செய்யாவிட்டாலும், ஆற்றலுடன் இருப்பார்கள் என்கின்றனர். இங்குள்ள காசி விஸ்வநாதர் கோயில் 22 ஆண்டுகளுக்கு பின் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் வரும் டிச. முதல் தேதி நடைபெறுகிறது. அதற்கான முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி இன்று நடந்தது. முன்னதாக சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முகூர்த்த காலுக்கு பால், நவதானியங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் போட்டு அபிஷேகம் செய்தனர். காலை 6:50 மணியளவில் முகூர்த்த கால் ஊன்றப்பட்டது. கூடியிருந்த பக்தர்கள் ‘ஹர ஹர மகாதேவா’ கோஷம் எழுப்பினார்கள். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ, ராமகிருஷ்ணன் , நகராட்சி தலைவர் வனிதா, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெயபாண்டியன், முருகேசன், விவசாய சங்க தலைவர் ஓ.ஆர். நாராயணன், நாகமணியம்மாள் பள்ளி தாளாளர் காந்த வாசன், முன்னாள் ரத உற்சவ கமிட்டி திருமலை சங்கர், வர்த்தக சங்க தலைவர் முருகன், முன்னாள் கவுன்சிலர்கள் சேகர், மாரியப்பன் உள்ளிட்ட அனைத்து சமுதாய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.