கம்பம் அருகே 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது சாமாண்டியம்மன் திருக்கோயில் உள்ளது. கம்பராயப் பெருமாளின் தங்கை சாமாண்டியம்மன். கம்பராயப் பெருமாள் கோயில் தேரோட்டத்திற்கு கொடிப்பட்டம் தங்கை கொண்டு வருவார். 10 நாட்கள் தேர்த் திருவிழா முடிந்து,பெருமாள் திருமண கோலத்தில் காந்திஜி வீதியில் செல்லும் போது, தங்கை அண்ணனிடம் சீர் கேட்டதாகவும், சீர் சரியாக தரவில்லை என கோபித்து சாமாண்டியம்மன் தெற்கு நோக்கி சென்று வயல் வெளியில் அமர்ந்தாகவும். அம்மனை சுற்றி புற்று வளர்ந்தது. அந்த வழியே சென்ற வளையல் வியாபாரியிடம் புற்றுக்குள் இருந்து அம்மன் கைகளை நீட்டி வளையல் கேட்டதாகவும், வியாபாரி அம்மனின் இரு கைகளிலும் வளையல்களை அணிவித்துள்ளார். பணம் கேட்டபோது, வியாபாரியின் மடியில் ஒரு பிடி மண்ணை அள்ளி போட்டது அம்மன். அச்சமடைந்த வியாபாரி சிறிது தூரம் சென்று பார்த்த போது அத்தனையும் தங்கமாக இருந்துள்ளது. அலறியடித்து புற்றின் முன்பு விழுந்து வணங்கினார் என தகவல் கூறுகின்றனர். தற்போதும் பெண்கள் வளையல்களை நேர்த்தி கடன்களாக அம்மனுக்கு செலுத்துகின்றனர்.
பிரசித்தி பெற்ற இந்த கோயில் கும்பாபிஷேகம் 1938 மே 2ல் நடைபெற்றது. 87 ஆண்டுகளாக திருப்பணி, கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. தற்போது இது குறித்த ஆலோசனை கூட்டம் கம்பராயப்பெருமாள் கோயில் தக்கார் பொன்முடி தலைமையில் நடந்தது. மாவட்ட அறங்காவலர் உறுப்பினர்கள் ஜெயபாண்டியன் , முருகேசன், பரம்பரை அறங்காவலரின் வாரிசுகள், பூஜாரிகள் திருமலை சுதாகரன், சாமாண்டி , முத்துச் சாமாண்டி, ஹரிஹரன், வேலுச்சாமி, லட்சுமணக்குமார், பிரவின்குமார், முருகபூபதி, பூசாரிகள் முத்துக் கண்ணன், சிவக்குமார், நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், நவ . 27 ல் பாலாலயம் நடத்தவும், பாலாலயத்தை தொடர்ந்து திருப்பணி வேலைகள் துவங்க முடிவு செய்யப்பட்டது.