பதிவு செய்த நாள்
01
டிச
2025
06:12
தேனி; வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. அதற்காக இன்று பாலாலய பூஜை விமர்சையாக நடந்தது. விரைவில் அதற்கான பணிகள் துவங்க உள்ளன.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்கு 10 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடத்த அறநிலைத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக நேற்று கோபுர கலசங்களுக்கு பாலாலய பூஜை நடந்தது. வீரபாண்டி கவுமாரியம்மன், கண்ணீஸ்வர முடையார், முருகன், விநாயகர், தட்சணாமூர்த்தி உள்ளிட்ட 8 கோபுர கலசங்களின் மூலமாக கும்பங்கள், பலகையில் வரையப்பட்ட கோபுர விமானங்களின் படங்கள் வைக்கப்பட்டு பூஜை, யாகங்கள் நடத்தப்பட்டன. விழாவிற்கு ஹிந்துசமய அறநிலைத்துறை உதவி கமிஷனர் ஜெயதேவி தலைமை வகித்தார். கோவில் செயல் அலுவலர் நாராயணி முன்னிலை வகித்தார். துறை ஆய்வாளர் கார்த்திகேயன், ஊர் முக்கியஸ்தர்கள், விழா உபயதாரர்கள் உள்ளிட்டோர் பூஜை, யாகத்தில் பங்கேற்றனர். கோவில் மேலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கணக்காளர் பழனியப்பன், அலுவலர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். உபயதாரர்களுடன் ஆலோசனை நடத்தி, விரைவில் கும்பாபிஷே கத்திற்கான பணிகள் துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.