திருப்பரங்குன்றத்தில் சுவாமிக்கு பட்டாபிஷேகம்; நாளை காலை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02டிச 2025 12:12
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமிக்கு கார்த்திகை திருவிழா பட்டாபிஷேகம் இன்று (டிச. 2) நடக்கிறது.
கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவ. 25ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான மலை மேல் மஹா தீபம் ஏற்றும் நிகழ்வு நாளை (டிச.,3) மாலை 6:00 மணிக்கு நடக்கிறது. அதற்கு முன் நிகழ்ச்சியாக இன்றிரவு 7:05 முதல் இரவு 7:30 மணிக்குள் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை காமதேனு வாகனம் கோயில் திருவிழா காலங்களில் சுவாமி, தெய்வானை தினம் ஒரு வாகனத்தில் ரத வீதிகளில் உலா வருவர். கார்த்திகை தீபத் திருவிழா 7ம் நாள் அன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கும். நாளை பக்தர்கள் கோயில் முன் வாசல் வழியாக சென்று தரிசனம் முடித்து மடப்பள்ளி வாசல் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு இரவு 9:00 மணி வரை திறந்திருக்கும். மதியம் நடை சாத்தப்படாது. ஆண்டுக்கு 2 முறை 16 கால் மண்டபம் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள சிறிய வைரத் தேர் தெப்பத் திருவிழா, கார்த்திகை திருவிழாவில் ரத வீதிகளில் வலம் வரும். நாளை காலை தேரோட்டம் நடக்கிறது. அதற்காக தேர் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.