பதிவு செய்த நாள்
01
ஜன
2013
11:01
குன்னூர்: ஜெகதளாவில் ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலமாக நடந்தது. நீலகிரி மாவட்டத்தில், ஹெத்தையம்மன் திருவிழா கடந்த 25ம் தேதி துவங்கி, பல்வேறு கிராமங்களில் நடந்து வருகிறது. கடந்த 26ம் தேதி பேரகணியில் நடந்த விழாவின் போது, உள்ளூர் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து,ஈரமாசி ஹெத்தையம்மன் திருவிழா துவங்கியது. அதன் ஒரு பகுதியாக, காரக்கோரையில் பூ குண்டம் திருவிழா நடந்தது. ஜெகதளா, காரக்கொரை, பேரட்டி, மேல் பிக்கட்டி, கீழ் பிக்கட்டி, மஞ்சுதளா, மல்லிக்கொரை, ஓதனட்டி கிராம மக்கள் பங்கேற்றனர். குண்டத்தில் பூசாரி தலைமையில் 9 பேர் இறங்கினர். நேற்று ஜெகதளா ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான படுகரின மக்கள் வெண்ணிற ஆடையுடன் பாரம்பரிய பாடல்கள் பாடி, ஹெத்தையம்மனை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர், வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதில், மாவட்டத்தில் உள்ள படுகர் கிராமங்களை சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்றனர்.
* மஞ்சூர் ஹட்டி, மணிக்கல், குந்தா தூனேரி உள்ளிட்ட கிராமங்களில் நடப்பாண்டுக்கான திருவிழா நேற்று நடந்தது. ஹெத்தையம்மன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து நடந்த காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை ஊர் தலைவர் ராஜூ தலைமையில், நிர்வாகிகள் செய்திருந்தனர்.