திருநெல்வேலி: நெல்லையில் ஆங்கில புத்தாண்டு துவக்கத்தை முன்னிட்டு கெட்வெல் கனக மகாலட்சுமி தாயாருக்கு 10,008 வளையல்கள் அணிவித்து வளைகாப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பெண் தெய்வங்களுக்கு செய்யப்படும் வளைகாப்பு பிரார்த்தனை சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது. வளைகாப்பு பிரார்த்தனையில் பங்கேற்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் வீட்டுக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் இருப்பர், பேறுகாலத்தில் தாய்க்கு சிரமம் இன்றி குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். ஆங்கில புத்தாண்டு துவக்கத்தை முன்னிட்டு நெல்லை ஜங்ஷன் கெட்வெல் கனக மகாலட்சுமி தாயாருக்கு 10,008 வளையல்கள் அணிவித்து நேற்று வளைகாப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கனக மகாலட்சுமி தாயாருக்கு இன்று காலை, மாலை சிறப்பு வழிபாடு நடக்கிறது. வழிபாட்டில் பங்கேற்கும் சுமங்கலி பெண்களுக்கு பிரசாதமாக வளையல் அளிக்கப்படுகிறது. ஏற்பாடுகளை ஸ்ரீநிவாச பட்டாச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்துள்ளனர். புத்தாண்டையொட்டி கெட்வெல் ஆஞ்சநேயருக்கு 1,008 தேங்காய் மாலை சிறப்பு அலங்காரம் இன்று செய்யப்படுகிறது. சிறப்பு வழிபாடு நடக்கிறது.