அனுமன் ஜெயந்தி: 100008 வடை மாலை சாற்றி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
பதிவு செய்த நாள்
19
டிச 2025 10:12
நாமக்கல்; ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, ஒரு லட்சத்து, எட்டு வடைமாலை சாற்றி வழிபாடு நடத்தப்பட்டது. நாமக்கல், கோட்டை பகுதியில் புரான சிறப்பு பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. உள்ளது. இங்கு, ஒரே கல்லில் உருவான, 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி, நின்ற நிலையில், சாந்த சொரூபியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மார்கழி மூல நட்சத்திரமான நேற்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, இன்று அதிகாலை முதல், 20க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள், சுவாமிக்கு வடை மாலை அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை, 5:00 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு, ஒரு லட்சத்து, எட்டு வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு, திரை விலக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, 11:00 மணிக்கு, வடைமாலை அலங்காரம் கலைக்கப்பட்டு, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சீயக்காய்த்துாள், 1,008 லிட்டர் பால், தயிர், திருமஞ்சனம் போன்ற நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம், 1:00 மணிக்கு, தங்க கவசத்தில், சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உள்ளூர், வெளியூர் பக்தர்கள், அதிகாலை முதலே ஒரு கி.மீ., துாரம் வரை வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக, 79, ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. மேலும், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நாமக்கல் கோட்டை சாலை, பூங்கா சாலை, எம்.ஜி.ஆர்., நுழைவு வாயிலில் இருந்து, மதுரை வீரன் கோவில் வரை முழுமையாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் உதவி கமிஷனர் இளையராஜா, அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் செய்திருந்தனர்.
|