பதிவு செய்த நாள்
21
டிச
2025
12:12
கடலாடி: மார்கழி மாதம் என்றாலே கோயில்களில் அபிஷேக அலங்கார தீபாராதனைகள் மற்றும் பக்தி பாடல்கள் ஒலிப்பது வாடிக்கையான நிகழ்வாகும்.
அதிகாலையில் மார்கழி மாதப் பனியில் எழுந்து நீராடி, புத்தாடை அணிந்து தெய்வ பக்தி பாடல்களை பாடி கடலாடி நகர் பகுதியில் முழுவதும் பக்தி வெள்ளமாக நடந்து செல்வது கடந்த 100 ஆண்டுகள் தொட்ட நிலையில் தற்போது வரை நடந்து வருகிறது.
கடலாடியில் ஸ்ரீ ராமானுஜ பஜனைக் குழு சார்பில் ஆண்டு தோறும் மார்கழி மாத 30 நாட்களும் அதிகாலை 4:30 மணியில் இருந்து பாமா ருக்மணி ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் இருந்து துவங்கி கடலாடியில் உள்ள பழமையான கோயில்கள் அனைத்திற்கும் பஜனை குழுவாக பாடி வருகின்றனர்.
விநாயகர், கிருஷ்ணர், அம்மன், முருகன் பாடல்கள், தியாகராஜ கீர்த்தனைகள், திருப்பாவை, திருவெம்பாவை, சைவநெறி பாடல்கள் மற்றும் பாரம்பரிய மரபு வழி பக்தி பாடல்களை கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பாடி வருகின்றனர்.
ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம், கஞ்சிரா உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைத்தவாறு நாத ஒலி எழுப்பியவாறு 20 பேருக்கும் மிகாத குழுவாக சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கோயில்களில் இசைத்து வந்து பின்னர் 7:00 மணிக்கு நிறைவாக பாடுகின்றனர். கடலாடி ஸ்ரீ ராமானுஜ பஜனை குழுவைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் நாகராஜன், ஜெயகிருஷ்ணன், ராம்குமார் ஆகியோர் கூறியதாவது:
கடலாடி நகர் பகுதியில் பல ஆண்டுகளாக பஜனை இசைத்து வருகிறோம். குறிப்பாக மார்கழி மாதம் பஜனையில் அனைவரும் ஆன்மிக பாடல்களை கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாதம் 30 நாட்களும் இதற்கென அதிக சிரத்தை எடுத்து இறை வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறோம் என வாத்தியங்களை இசைத்தபடி கூறினர்.