பதிவு செய்த நாள்
28
டிச
2025
01:12
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் அருகில் கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுவதை போலீசார் தடை செய்ய வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 8ம் தேதி விமரிசையாக நடந்தது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மேல்மருவத்துார் செல்லும் செவ்வாடை பக்தர்களும், சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களும் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வருவதால் வழக்கத்தைவிட கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வெளியூரில் இருந்து கார், வேன், பேருந்து, உள்ளிட்ட வாகனங்களில் வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
இதனால், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு செல்லும் சாலையின் அகலம் வெகுவாக குறைந்து விட்டதால், இச்சாலையில் ஆட்டோ, கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகின்றன.
நடந்து செல்வதற்கு கூட இடமில்லாமல் பக்தர்கள் நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், முகூர்த்த நாட்களில் கோவிலை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த மாணவ – மாணவியர் குறித்த நேரத்தில் பள்ளி, கல்லுாரி செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே, ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு போலீசார் தடை விதிக்க வேண்டும்.
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் ஒலிமுகமதுபேட்டை அருகில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில், சுற்றுலா வாகனங்களை நிறுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.