பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், சின்னதடாகம் வட்டாரங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள கரி வரதராஜ பெருமாள் கோயில்களில் பெருமாள் தாயார்களுடன், சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. சொர்க்க வாசல் வழியாக நரசிங்க பெருமாளுடன் வந்த பக்தர்கள், கோவிந்தா! கோவிந்தா! என்ற கோஷத்துடன் பெருமாளை வழிபட்டனர். நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில், பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்புலுபாளையம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில், காலை உற்சவர் சொர்க்கவாசல் வழியே புறப்பட்டு கோயிலை சுற்றி வந்தார். தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. மாலை ஊஞ்சல் சேவை, மங்கள ஆரத்தி, சயன பூஜை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சின்னதடாகம் கரிவரதராஜ பெருமாள் திருக்கோயிலில் சிறப்பு பூஜை, பஜனை நடந்தது. பெருமாள் திருவீதி உலா நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். காளிபாளையம் திருமலைராயப்பெருமாள் கோயிலில், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாலமலை ரங்கநாதர் கோயில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.