பதிவு செய்த நாள்
08
ஜன
2013
11:01
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில், சவுராஷ்டிர விப்ர குலத்தில், கு.நன்னுசாமி பாகவதரின் ஐந்தாவது மகன் வெங்கட்ரமண பாகவதர். சவுராஷ்டிரா, தமிழ், தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளைக் கற்றார். தந்தையிடம் சங்கீதம் படித்தார். திருவையாறில் சத்குரு தியாகராஜ சுவாமியை குருவாக ஏற்றார். சங்கீதத்தை உலகத்திற்கு பரப்பிய சவுராஷ்டிர விப்ர சமூகத்தவர் ஒருவர், தனக்கு சீடராக மாட்டாரா என்று தியாகராஜ சுவாமி பலமுறை நினைத்ததுண்டு. ஒரு ராமநவமியன்று, தியாகராஜ சுவாமி பூஜை செய்து கொண்டிருந்தார். வேங்கடரமண சுவாமி அதற்குரிய பழங்கள், துளசி மாலை அகியவற்றை சேகரித்து வந்தார். துளசியை சுவாமிக்கு சமர்ப்பித்தபடியே "துளசிதள மூலசே சந்தோஷ முகர்புஜித்து என்ற கீர்த்தனையைப் பாடிக் கொண்டே அர்ச்சனை செய்த போது, ஒவ்வொரு துளசிதளமும் ரோஜா, முல்லை, சம்பங்கி, மல்லிகைப் பூக்களாக மாறி ராமரின் பாதத்தில் விழுந்தது. இந்த அதிசயம் கண்ட தியாகராஜ சுவாமி, பெரும் மகிழ்ச்சியுடன், "என் அருமை சீஷ்யரே! உமக்கு தெய்வீக சம்பத்து உண்டு. எனது புண்ணியத்தில் உமக்கு பங்குண்டு என்று கூறி, அவரைத் தனது பிரதம சீடராக ஏற்றுக் கொண்டார். திருவையாறில் தை மாதம் பகுள பஞ்சமியை ஒட்டி தியாகராஜ சுவாமி ஆராதனை நிகழ்ச்சி நடப்பதைப் போல, வெங்கட்ரமண பாகவதர் அவதரித்த அய்யம்பேட்டை, மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம், சேலம், பரமக்குடி, ஈரோடு, பாளையங்கோட்டை, ராசிபுரம், பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் அவரது ஆராதனை விழா நடக்கிறது.
மதுரையில் விழா: மதுரை சவுராஷர்டிர சபையில் வேங்கடரமண பாகவதரின் 232வது ஜெயந்தி இசைவிழா நாளை ( 9ம் தேதி) முதல் 3 நாள் நடைபெற உள்ளது. 9ம் தேதி காலை 7 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெறும். பகல் 11 மணிக்கு ஜெயந்தி இசைவிழா துவங்குகிறது. மாலை 6 மணி முதல் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் 8 மணிக்கு பாரதி மகாதேவன பாட்டு இடம் பெறும்.
10ம் தேதி காலை 10 மணிக்கு தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடப்படும். மாலை 5 மணி முதல் நடைபெறும் இசை விழாவில், இரவு 7 மணிக்கு அனுராதா கிருஷ்ணமூர்த்தியின் கச்சேரி இடம் பெறும். 11ம் தேதி காலை 10 மணிக்கு ஏ.ஜி..சங்கர் குழுவினரின் நாலாயிர திவ்ய பிரபந்தம் நடைபெறும். மாலை 5 மணி முதல் நடைபெறும் இசை விழாவில் இரவு 8 மணிக்கு திருச்சி கணேசன் பாடுகிறார். 10 மணிக்கு ஆஞ்சனேயர் உற்சவத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.