பதிவு செய்த நாள்
08
ஜன
2013
11:01
சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்கு விழாவுக்கு முன், எருமேலி சந்தனக்குடம் ஜன.,10, பேட்டைதுள்ளல் ஜன., 11 ம் தேதி நடக்கிறது. ஜன., 12 ல், பந்தளத்திலிருந்து திருவாபரணம் புறப்படுகிறது. சபரிமலையில், ஜன., 14 ல் மகர விளக்கு விழா நடக்கிறது. மகரஜோதி தரிசனத்துக்காக எல்லா பக்தர்களும், சன்னிதானத்தில் மட்டும் கூடியிருக்காமல், ஜோதி தெரியும் பிற இடங்களுக்கு அனுப்பி வைக்க தேவசம் போர்டு, போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மகரவிளக்குக்கு முன்னோடியாக, எருமேலி சந்தனக்குட பவனி, ஜன., 10 ல் நடக்கிறது. எருமேலி பள்ளிவாசலில், ஐந்து யானைகள் மீது நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று காணிக்கை வசூலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள், அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டைதுள்ளல் நடக்கும். ஜன., 12 ல், பந்தளத்தில் இருந்து திருவாபரணம் புறப்படுகிறது. பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து, பிற்பகல் 12 மணிக்கு உச்சபூஜைக்கு பின், பவனி புறப்படும். பந்தளம் மன்னர் பிரதிநிதியாக, பந்தளம் புத்தன் கோயிக்கல் கொட்டாரத்தில் இருந்து, பரணி திருநாள் அசோகவர்ம ராஜா, இந்த பவனியில் வருவார். ஐயப்பனை வளர்த்தவர் பந்தளம் மன்னர்; ஐயப்பன் சபரிமலை சென்ற பின், ஆபரணங்களுடன், தந்தை மகனை காணச்செல்வதாக இதன் ஐதீகம். தொடரும் கூட்டம்: சபரிமலையில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. ஐயப்பா சேவா சங்கத்தினர், 28 புதிய முகாம்களை திறந்துள்ளனர். குளத்துபுழா, ஆரியங்காவு, வீரபாண்டி, குமுளி, பெரும்பாவூர், கன்னியாகுமரி, வண்டிபெரியாறு, சத்திரம் அமரவிளையிலும் முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
போலீஸ் மீது நடவடிக்கை: சபரிமலை சன்னிதானத்தில், போலீஸ்காரர் பிரிஜித் செருப்புடன் சென்றது சர்ச்சையை கிளப்பியது. இதைத் தொடர்ந்து பூஜைகள் நிறுத்தப்பட்டு, சுத்திகலசம் நடந்தது. அதிகாரிகள் விசாரித்தனர். இதன்படி, அவரை பணியில் இருந்து விடுவித்து திருப்பி அனுப்பினர்.