பதிவு செய்த நாள்
08
ஜன
2013
11:01
திசையன்விளை: உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் தை திருவிழா வரும் 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்திபெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலாகும். இக் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தைத் திருவிழா பிரசித்தி பெற்றது. விழாவிற்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம், கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்பர். இவ்வாண்டு தைத் திருவிழா வரும் 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 29ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. 19ம் தேதி அன்று அதிகாலை 4 மணிக்கு கொடிபட்டம் யானை மீது ஊர்வலம், மங்கள இசை, யாதஸ்தானத்தில் இருந்து சுவாமி சந்திரசேகரர்,அம்பாள் மனோன்மணி அலங்கார மண்டபத்தில் எழுந்தருளல் சிறப்பு அபிஷேகம், உதயமார்த்தாண்ட பூஜை நடக்கிறது. தொடர்ந்து காலை 8மணிக்கு கொடியேற்றம், விநாயகர் வீதிஉலா, உச்சிக்கால பூஜை, சிறப்பு அபிஷேகம்,ஆராதனை,சுவாமி,அம்பாள் வீதி உலா,நாதஸ்வர இன்னிசை, சமயசொற்பொழிவு ஆகியவை நடக்கிறது.
எட்டாம் திருவிழாவான 26ம் தேதி வரை தினமும் காலை, மாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், உதயமார்த்தாண்டபூஜை, இரவு சுவாமி, அம்பாள் வீதியுலா, கலை நிகழ்ச்சிகள், சமய சொற்பொழிவுகள் நடக்கிறது. ஒன்பதாம் திருவிழாவான 27ம் தேதியன்று சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளலும்,தொடர்ந்து காலை 7மணிக்கு தேர்வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தீர்த்தவாரி, சிறப்பு அபிஷேகம்,ஆராதனை,இரவு வீதிஉலா, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. பத்தாம் திருவிழாவான 28ம் தேதி சுவாமி, அம்பாள் தெப்பத்திற்கு எழுந்தருளி தெப்பஉற்சம் நடக்கிறது. 29ம் தேதி 11ம் திருவிழாவில் சுவாமி, அம்பாள் ரதவீதியில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா, சிறப்பு அபிஷேகம், சேர்க்கை தீபாராதனை, சிறப்பு பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்துவருகின்றார். பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளியூர் டி.எஸ்.பி.ஸ்டேன்லி ஜோன்ஸ் தலைமையில் உவரி போலீசார் செய்துவருகின்றனர். உவரிக்கு அரசு சிறப்பு பஸ்கள் விடப்படுகின்றன.