பதிவு செய்த நாள்
08
ஜன
2013
11:01
ஆழ்வார்குறிச்சி:கடையம் வில்வவனநாதர்,நித்யகல்யாணி அம்பாள் கோயிலில் வரும் 23ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கடையத்திலிருந்து ராமநதி அணைக்கு செல்லும் வழியில் வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்பாள் கோயில் உள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இக்கோயிலில் பாப விமோசனம் பெற தசரத சக்கரவர்த்தி இங்கு வழிபட்டார். கடையத்தில் பாரதி வாழ்ந்த போது தினமும் கோயிலுக்கு சென்று சுவாமி அம்பாள் வழிபடுவார், பிறகு கோயில் முன் உள்ள பெரிய பாறையில் அமர்ந்து "காணி நிலம் வேண்டும் பராசக்தி, நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ, உஜ்ஜையினி நித்யகல்யாணி என பல பாடல்களை எழுதியுள்ளார்.
கும்பாபிஷேக விழா துவக்கம்: கோயிலில் கடந்த 2002ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. 11 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 23ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் 17ம் தேதி காலை 5.30 மணிக்கு அனுக்ஞை, மகா கணபதி பூஜை, ஹோமம், பிரம்மச்சாரி பூஜை, கோ பூஜை, கஜ பூஜையுடன் துவங்குகிறது காலை 9 மணிக்கு நவக்கிரக ஹோமம், மாலை 4 மணிக்கு வாஸ்துசாந்தி, ரக்ஷா ஹோமம், பிரவேசபலி ஆகியவை நடக்கிறது. 18ம்தேதி காலை 8மணிக்கு திசா ஹோமம், கன்னிகா பூஜை, சுவாசினி பூஜை, தம்பதி பூஜையும், மாலை 5மணிக்கு துர்க்கா பூஜை, தீபாராதனையும் நடக்கிறது. 19ம் தேதி காலை 8 மணிக்கு சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், மாலை 5 மணிக்கு சத்ருசம்கார ஹோமம் நடக்கிறது. 20ம் தேதி காலை 8 மணிக்கு மிருத்ஞ்சய ஹோமம், சுதர்சன ஹோமம், கங்கா பூஜை, தீர்த்த சங்கிரகனம், மிருத்சங்கிரகனம், அங்குரார்ப்பணம், பாலிகாஸ்தாபனம், காலை 11 மணிக்கு பிரசன்ன அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
மாலை 5மணிக்கு எஜமான வர்ணம், ஆச்சார்ய வர்ணம், ரட்சா பந்தனம், இரவு 7மணிக்கு கும்ப அலங்காரம், மூர்த்தி கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், முதற் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹுதி, வேதபாராயணம், திருமுறை பாராயணம் நடக்கிறது. 21ம் தேதி காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. 22ம்தேதி காலை 8 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, பகல் 12 மணிக்குள் யந்திர ஸ்தாபனம், மருந்து சாத்துதல், பிம்பசுத்தி, ரக்ஷாபந்தனமும், மாலை 5 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது.
கும்பாபிஷேகம்: 23ம் தேதி கும்பாபிஷேகத்தன்று அதிகாலை 3 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜையும், 5.30 மணிக்கு யாத்ராதானம், கும்பம் எழுந்தருளலும் நடக்கிறது. காலை 6.40 மணிக்கு மேல் 7.20க்குள் விமானம், ராஜகோபுரம் மற்றும் வில்வவனநாதர், நித்யகல்யாணி அம்பாள், பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 8மணிக்கு அன்னதானம், 10 மணிக்கு மஹா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், திருக்கல்யாணம், தீபாராதனையும், இரவு 7.30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடக்கிறது. மகா கும்பாபிஷேகத்தை சங்கர்நகர் கணேசபட்டர் நடத்துகிறார். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி, தக்கார், கோயில் திருப்பணி கவுரவ ஆலோசகர்கள், நித்யகல்யாணி சேவா சமாஜம், கடையம் பக்த ஜனசபா மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.