திருச்செங்கோட்டில் விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் அருளாசி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2026 11:02
நாமக்கல்; ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களுக்கு வியாழக்கிழமை வருகை புரிந்து சிறப்பித்தாா். முன்னதாக சுவாமிகளுக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏனாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரா கல்லூரியில் தமிழ் வளா்ச்சி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்காக ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெய்வத்தமிழ் இருக்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பொருட்டு, காஞ்சி சங்கராச்சாரியாரிடம் கல்லூரியின் தலைவா் மற்றும் செயலாளா் ரூ. 5 லட்சத்தை நன்கொடையாக வழங்கினாா்.
விழாவில் காமகோடி பீடாதிபதி சுவாமிகள் பேசுகையில், தமிழ் மொழியின் மேம்பாடுகள் குறித்தும், பெண்களுக்காக தொடங்கப்பட்ட விவேகானந்தா கல்வி நிறுவனம் மென்மேலும் வளா்ச்சி அடைய வேண்டும், கல்லூரியில் பயிலும் மாணவிகள் நல்லறிவு பெற்று வாழ்க்கையில் உயர வேண்டும் என வாழ்த்தி, அருளாசி வழங்கினாா். விழாவில் கல்லூரி துணை நிா்வாக இயக்குநா், அனைத்து கல்லூரிகளின் முதல்வா்கள், துணை முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.