பதிவு செய்த நாள்
10
ஜன
2013
11:01
திசையன்விளை: உவரி அந்தோணியார் திருத்தல பெருவிழா வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ திருத்தலங்களில் கோடி அற்புதர் என அழைக்கப்படுவது உவரி புனித அந்தோணியார் திருத்தலம்.ஆண்டு தோறும் சர்ச்சில் நடைபெறும் பெருவிழாவிற்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமில்லாது தமிழகம், கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்பர். இவ்வாண்டு திருத்தல பெரு விழா வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.27ம் தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.முதல் நாள் விழாவான கொடியேற்றம் அன்று காலையில் திருப்பலி, பங்கு சர்ச்சிலிருந்து திருத்தலத்திற்கு திருயாத்திரை, மாலையில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ்க்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஆயர் தலைமையில் திருக்கொடி அர்ச்சிப்பு, கொடியேற்றம், மறையுரை, திவ்யநற்கருணை ஆசீர் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.16ம் தேதி இரண்டாம் திருவிழா முதல், 25ம் தேதி 11ம் திருவிழா வரை காலையில் திருப்பலி,திருயாத்திரை, பாவசங்கீர்த்தனம், நற்செய்திகள், மாலையில் மறையுரை, திவ்ய நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.
26ம் தேதி 12ம் திருவிழாவில் காலையில் திருப்பலி, திருயாத்திரை, மாலையில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைகுரு ஆண்ட்ரூ டிரோஸ் அடிகள் மறையுரை நடக்கிறது. திருவிழா இறுதி நாளான 27ம் தேதி காலையில் திருச்சி சலேசியசபை மறை மாநில தலைவர் ஆல்பர்ட் ஜான்சன் அடிகள் தலைமையில் பெருவிழா திருப்பலி, மதுரை புனித பேதுரு குருத்துவக் கல்லூரி மரிய அந்தோணி அடிகள் மறையுரை, திருவனந்தபுரம் உயர் மறை மாவட்டம் ஜோஸ் பிராங்க்ளின் திருப்பலி, மற்றும் சிறப்பு திருப்பலி, சப்பர பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.ஏற்பாடுகளை திருத்தல தந்தையர்கள் கிருபாகரன், உபார்ட்டஸ், வினோபெர்ன், பங்கு மக்கள், திருத்தல நிதிக்குழு, திருத்தல வளர்ச்சி பணிக்குழு, பக்த சபையினர், அன்பியங்கள், பங்கின் பள்ளிகள், மரியின் ஊழியர் சபையினர் செய்து வருகின்றனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளியூர் டி.எஸ்.பி. ஸ்டேன்லி ஜோன்ஸ் தலைமையில் உவரி போலீசார் செய்து வருகின்றனர். உவரிக்கு பல்வேறு ஊர்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் விடப்படுகின்றன.