பதிவு செய்த நாள்
25
பிப்
2026
11:02
திருப்பூர்: ‘‘சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு, முக்தி இன்பம் இப்பிறவியிலேயே கிடைக்கும்,’’ என, சைவ சித்தாந்த சொற்பொழிவாளர் சிவசண்முகம் பேசினார்.
கொங்கு மண்டல ஆடல் வல்லான் அறக்கட்டளை சார்பில், செவ்வாய்க் கிழமை தோறும் மாலை, 5:00 முதல், 7:00 மணி வரை, ஹார்வே குமாரசாமி மண்டபத்தில், திருவாசகம் தொடர் சொற்பொழிவு நடந்து வருகிறது.
அவ்வகையில், நேற்று சைவ சித்தாந்த சொற்பொழிவாளர் சிவசண்முகம் பேசியதாவது:
‘பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்’ என்று, இந்த பிறவில் இருந்து விடுதலை பெற ஞானிகள் விரும்பினர். உயர்ந்த ஆன்மாக்களுக்கு, பிறவியை முடித்து வைத்து, பிறவியில் இருந்து விடுபடுமாறு செய்கிறார். பிறவிகளை கடந்து என்று கூறாமல், இப்பிறவியிலேயே சுவாமி அதனை செய்வார்.
சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு, முக்தி இன்பம் இப்பிறவியிலேயே கிடைக்கும். நம்பிக்கையை கொடுப்பது சிவபுராணம். மக்களுக்கு கடவுள் மீது உள்ள நம்பிக்கை முக்கியம். கடவுள் வழிபாட்டால் உலகியலில் நமக்கு தேவையான எல்லாவற்றையும் இறைவன் தருவான் என்ற நம்பிக்கையை திருவாசகம் கொடுக்கிறது.
‘நாயிற்கடையாய் கிடந்து அடியேற்கு’ என்று தன்னை நாயைவிட கீழான நிலையில் இறங்கி வந்து கூறுகிறார். ஏனைய பக்குவமில்லாத ஆன்மாக்களை குறிப்பிடாமல், தன்னையே ஒப்பிட்டு கூறுவது, மாணிக்கவாசகரின் உன்னதமான பணிவை குறிக்கிறது. அன்னையின் அன்பை காட்டிலும் அம்மையப்பரின் அன்பு எல்லையற்றது.
எல்லா உயிர்களுக்கும் அன்பு என்பது அன்னையிடம் இருந்துதான் கிடைக்கும். நம் அன்னையின் அன்பு ஒரு பிறவியுடன் முடிந்துவிடும்; ஒவ்வொரு பிறவியிலும், அம்மையப்பரின் அன்புதான் நிரந்தரமானது.
உலகில், இறைவன் தான் அனைத்து உயிர்கள் மீதும் அன்பை பொழிகிறார். கருணை காட்டும் சிவபெருமானை நாம் வணங்க வேண்டும். சிவனருளால், மீண்டும் மீண்டும் பிறந்து தொல்லை அடையாமல், அவரது திருவடியில் இன்பமடையலாம்.