திருமுருகநாத சுவாமி கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
பதிவு செய்த நாள்
25
பிப் 2026 11:02
அவிநாசி: திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், மாசி தேர்த்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நேற்று விமரிசையாக நடந்தது. கொங்கேழு சிவாலயங்களில் ஒன்றாக விளங்கும் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், மாசி தேர்த்திருவிழா கொடியேற்றம், நேற்று காலை ரோகிணி நட்சத்திரத்தில் துவங்கியது. முன்னதாக ஸ்ரீவிநாயகர், சோமாஸ்கந்தர், முயங்கு பூண்முலை வள்ளியம்மை, வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசண்முகநாதர் மற்றும் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. திருவிழாவில், இன்று (25ம் தேதி) சூரிய சந்திர மண்டல காட்சி, நாளை, (26ம் தேதி) பூத வாகனம், சிம்ம வாகன காட்சி, 27ம் தேதி புஷ்ப விமான காட்சி நடைபெறுகிறது. விழாவில் முக்கிய நிகழ்வான பஞ்ச மூர்த்திகள், 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் மற்றும் திருவீதி உலா, 28ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து, மார்ச் 1ல் திருக்கல்யாணம் யானை மற்றும் அன்ன வாகன காட்சிகள், 2ம் தேதி அதிகாலை சோமாஸ்கந்தர், சண்முகநாதர் மற்றும் அம்பாள் தேர்களில், உற்சவமூர்த்திகள் எழுந்தருள்கின்றனர். அடுத்த நாள், சந்திர கிரகணம் என்பதால், மூன்று தேர்களும், 2ம் தேதி காலை, 10:00 மணி முதல் ஒரே நாளில் வடம் பிடித்து இழுத்து, நிலை நிறுத்தப்படும். மார்ச் 3ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு பகல் 12:00 மணியளவில் கோவில் நடை சாத்தப்பட்டு, 4ம் தேதி காலை வழக்கம் போல் நிகழ்ச்சிகள் நடைபெறும். 4ம் தேதி பரிவேட்டை, குதிரை, சிம்ம வாகன காட்சிகள், தெப்ப திருவிழா, 5ம் தேதி ஸ்ரீ சுந்தரர் வேடுபறி திருவிழா, 6ல் பிரம்ம தாண்டவ தரிசன காட்சி ஆகியன நடைபெறுகிறது. மார்ச் 7ல் மஞ்சள் நீர் விழா, மயில்வாகன காட்சியுடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.
|