தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 வைணவ தலங்களில் 20வது திவ்யதேசமாகவும், சோழ நாட்டு திருப்பதிகள் 40 தலங்களில், 14வது திவ்ய தேசமாகவும், வஞ்சுவள்ளி தயார் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இத்தலத்தில், மூலவராகவும் உற்ஸவராகவும் விளங்கும் கல்கருட பகவான்,தை மாதத்தில் நடைபெறும் முக்கோடி தெப்பத் திருவிழாவின் போதும், பங்குனி மாதத்தில் நடைபெறும் பெருந்திருவிழாவின் போதும், கல்கருட சேவைாக வெளி வருவது சிறப்பு. இந்தாண்டு பங்குனி திருத்தேர் திருவிழா கடந்த மார்ச் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. யாளி, கிளி, சூரிய பிரபை, சேஷ, அன்னபட்சி, கமல, அனுமன், யானை, குதிரை என பல்வேறு வாகனங்களில் தினமும் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நான்காம் நாளான நேற்று கல்கருட சேவை நடைபெற்றது. அப்போது, கருட பகவான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சன்னதியில் இருந்து முதலில் நான்கு பேர், அடுத்து எட்டு பேர், 16 பேர், 32 பேர், 64 பேர் என கருடபகவானின் எடைக்கு ஏற்ப பக்தர்கள், கருடபகவானை சுமந்து வாகன மண்டபத்தில் எழுந்தருளும் காட்சியை ஏராளமான பக்தர்கள் கோவிலின் வெளிப்புறமும் உள்புறமும் காத்திருந்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து வரும் ஏப்.1ம் தேதி திருத்தேராட்டமும், மதியம் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.