குற்றாலம்: குற்றாலநாதர் கோயில் தெப்ப உற்சவ திருவிழாவை முன்னிட்டு தெப்பக்குளம் சீரமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றாலத்தில் பிரசித்திபெற்று விளங்கும் திருக்குற்றாலநாத சுவாமி - குழல்வாய்மொழி அம்பாள் கோயிலில் தெப்ப உற்சவ திருவிழா ஆண்டுதோறும் தை மாதம் மகம் நட்சத்திரத்தன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்தாண்டு வரும் 28ம்தேதி தெப்ப உற்சவ திருவிழா நடத்தப்படுகிறது. திருக்குற்றாலநாதர் - குழல்வாய்மொழி அம்பாள் மற்றும் இலஞ்சி குமரன் ஆகியோர் தெப்பஉற்சவத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தெப்பத்தில் வலம் வருவர். இதனையடுத்து தெப்பத்திற்கு சிற்றருவியில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கான ஏற்பாடு கோயில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. செயல் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் முன்னிலையில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.