பதிவு செய்த நாள்
15
ஜன
2013
10:01
ஈரோடு: பவானி பழனியாண்டவர் கோவிலில், ஜன., 22ம் தேதி இரவு முருக பக்தர்கள் பாதயாத்திரை புறப்படுகின்றனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக திகழ்வது பழனி. இக்கோவிலுக்கு அதிகளவில் முருக பக்தர்கள் விரதம் இருந்து பாதை யாத்திரை செல்வர். நடப்பாண்டில் தை பிறப்புக்கு முன்பே, முருக பக்தர் பாதயாத்திரை செல்ல துவங்கியுள்ளனர். தமிழகத்தில் பாதையாத்திரை பக்தர்கள் எண்ணிக்கையில், ஈரோடு மாவட்டம் பவானி பழநியாண்டவர் கோவில் குழுவினர் முன்னிலையில் உள்ளனர். நடப்பாண்டில் தமிழர் திருநாளான தை மாதம் நேற்று பிறந்தது. இதனை முன்னிட்டு பவானி மற்றும் அதன் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் மாலை அணிய துவங்கியுள்ளனர். பவானி, பழனியாத்திரை அறக்கட்டளை சார்பில், ஜன., 22ம் தேதியன்று பாதயாத்திரையாக பக்தர்கள் பழனி புறப்படுகின்றனர். ஜன., 22ம் தேதி காலை, 7 மணிக்கு பவானி பழனியாண்டவர் கோவிலில் இருந்து, பாதயாத்திரை குழுவினர், கூடுதுறை சென்று இரட்டை விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து காவடி எடுக்கவுள்ளனர். கூடுதுறையில் ஆறுமுக கடவுள், சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மன், ஆதிகேசவப்பெருமாள், சவுந்திரவல்லித்தாயார், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், செல்லியாண்டியம்மன், மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்கின்றனர்.
மாலை, 4 மணிக்கு முருகனுக்கு முத்தங்கி அலங்காரம் நடக்கிறது. இரவு, 7.30 மணிக்கு பாதயாத்திரை புறப்பட்டு, சித்தோடு செங்குந்தர் திருமண மண்டபத்தில் இரவு உணவு முடித்து, நசியனூரில் தங்குகின்றனர். இரண்டாம் நாள் யாத்திரையாக, 23ம் தேதி காலை பெருந்துறை சக்தி திருமண மண்டபத்தில் சாப்பாட்டுடன் கூடிய தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றிரவு உணவு பிடாரியூரில் முடித்து, திட்டுப்பாறையில் தங்கி ஓய்வெடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் நாள் யாத்திரையாக, ஜன., 24ல் பகலில் வட்டமலையில் தங்கி, இரவு தங்கி ஓய்வெடுக்க குள்ளாய்பாளையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நான்காம் நாள் ஜன., 25ல் பகலில் அலங்கியம், அமராவதி ஆற்றுப்பாலத்தில் சிற்றுண்டி முடித்து, நரிக்கல்பட்டியில் இரவு தங்குகின்றனர். நிறைவு நாளான ஜன., 26 அன்று காலை பழனி அடைந்து, பட்டத்து விநாயகர் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்படுகின்றனர். பழனியில் பட்டத்து விநாயகருக்கு அபிஷேம் செய்து கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்து, திரு ஆவினன் குடியில் அபிஷேகம் செய்து திரும்புகின்றனர். ஜன., 27 காலை, 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 9.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. அன்று மாலை, 5 மணிக்கு மஹா தரிசனம் நடக்கிறது. பழனி பாதயாத்திரை ஏற்பாடுகளை அறக்கட்டளை அமைப்பாளர் முத்துக்கருப்பன் மற்றும் தலைவர் பாஸ்கர சேதுபதி செய்து வருகின்றனர்.